சமகால இஸ்லாமிய அறிஞர்களில் ஒரு வரான இவர் 1941 ஆம் ஆண்டு தென் தூனிஸியாவில் ஹாமா என்ற நகரத்தில் பிரந்தார் . தனது கிராமத்தில் ஆரம்பக் கல்வியைக் கற்றுக் கொண்டு பின்னர் காபூஸ் நகரத்திற்குச் சென்றார் . பின்னர் அங்கிருந்து தலைநகர் தூனிஸ் சென்று ஸைதூனா பல்கலைக்கழகத்தில் இளமாணி கல்வியைப் பூர்த்தி செய்தார் . அதன் பின்னர் கல்வியைத் தொடரும் நோக்கில் எகிப்து சென்றார் . அங்கு இருந்த போது நாஸரிய சிந்தனையால் ஆக்ர்ஷிக்கப்பட்டார். என்றால் இந்தத் தொடர்பு நீண்ட நாட்கள் நிலைத்திருக்க விலை . பின்னர் சிரியாவின் தலை நகரான டமஸ்கஸ் சென்று தத்துவத்துறையில் பட்டம் பெற்றார் . இங்கு தான் இவரது இஸ்லாமிய சிந்தனைக்கான முதலாவது விதைகள் முளையிட ஆரம்பித்தது .
Monday, February 13, 2017
Wednesday, February 1, 2017
இலங்கை முஸ்லிம்களின் தேசிய பங்களிப்பு
இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு பூர்வீக வரலாறு இல்லை அவர்கள் வந்தான் வரத்தார்கள் என்று கடந்த காலங்களில் ஒரு சில பெளத்த இனவாதிகளால் தார்மாராக விமர்சனம் செய்யப் பட்டு வந்தது . உண்மையில் இலங்கை முஸ்லிம்கள் இலங்கைக்கு செய்த பங்களிப்பை ஒரு போதும் எம்மால் அளவிட முடியாது . அது இலங்கை முஸ்லிம்கள் சர்வதேசரீதில் செய்த பங்களிப்பாக இருந்தாலும் சரி.
இன்று இலங்கை என்ற நாட்டில் முத்துக்கள் , பவழம்கள் , யானைத் தந்தங்கள் , வாசனைத் திரவியங்கள் ஐரோப்பிய சந்தைகளிலும் அரபு நாட்டு சந்தைகளிலும் பெரிதாகப் பேசப்படுகின்றது என்றால் அதற்குக் காரணம் அரேபிய முஸ்லிம்களே . இப்படி இருக்க இலங்கை முஸ்லிம்கள் எப்படி இலங்கையின் இறைமைக்கு சவாலாக இருப்பார்க்கள் ?
இலங்கை முஸ்லிம்கள் சர்வதேசரீதியில் மாத்திரமல்ல தேசியரீதியிலும் பாரிய பங்களிப்பு செய்துள்ளார்கள் . அக்காலத்தில் மன்னர்களின் பாதுகாவலர்களாகவும் , அரச வைத்தியர்களாகவும், மன்னர்களின் சமையல் காரர்களாகவும் இருந்துள்ளார்கள்.
* இலங்கை முஸ்லிம்கள் வர்த்தகத்துறையில் செய்த பங்களிப்பு
1762 காலப்பகுதியில் கண்டிய இராஜசிங்க மன்னனை ஆங்கிலேயத் தூதுவரான ஜோன் பைபஸ் சந்திக்கச் சென்ற போது திருகோணமலையில் இருந்து கண்டிக்குச் செல்லும் வழியில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான 20 முதல் 30 வரையான பொதி சுமக்கும் மாடுகளையும் அவற்றை வழி நடாத்திச் செல்லும் வர்த்தகக் கூட்டம் ஒன்றைக் கண்டதாகக் குறிப்பிடுகிறார் .
நெசவுத்தொழிலை இந்த நாட்டுக்கு அறிமுகம் செய்து வைத்த பெருமையும் இலங்கை முஸ்லிம்களையே சாரும். பர்பரீனில் வாழ்ந்த முஸ்லிம் வர்த்தகர் ஒருவரால் 12ம் இறுதியில் அல்லது 13ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நெசவுத் தொழில் அறிமுகம் செய்துவைக்கப்பட்டதென அலெக்ஸாண்டர் ஜோன்ஸ்டன் குறிப்பிடுகிறார். அதேபோல் கறுவாப் பயிச் செய்கையில் மட்டுமன்றி கறுவாவைப் பதனிடுவதிலும் நமது முன்னோர்கள் அதிக ஈடுபாடுகாட்டி வந்துள்ளதை வரலாற்றேடுகளில் காணமுடிகிறது.
உதாரணமாக “ பொதுவாக கறுவா இலங்கையின் தென்மேற்கு கடலோரப் பகுதிகளிலும் அதன் உட்பிரதேசங்களிலும் வளர்ந்து வரும் ஒருவகைப் பயிராகும். கரையோர மாகாணங்களில் கறுவா பயிரிடுவதையும் பதனிடுவதையும் ஒரு தனிப்பட்ட சாதியினரே-முஸ்லிம்களே செய்து வருகின்றனர். அவர்களது எண்ணிக்கை 24000க்கும் 25000க்கும் இடைப்பட்டதாகும்.” (அலெக்ஸாண்டர் ஜோன்ஸ்டன் ஆசியக் கழகத்துக்கு எழுதிய கடிதத்திலிருந்து)
* இலங்கைவாழ் முஸ்லிகள் மருத்துவத் துறையில் செய்த பங்களிப்பு.
மருத்துவத் துறையைப் பொறுத்தவரை யூனானி வைத்தியம் இலங்கை முஸ்லிம்களின் முக்கியமானதொரு தேசியப் பங்களிப்பாகும். இது 9ம்,10ம் நூற்றாண்டுகளில் கரையோரத் துறைமுக நகர்களில் வாழ்ந்த அரபுமக்கள் ஊடாக இந்த யூனானி மருத்துவப் பாரம்பரியம் அறிமுகமானது. ஆரம்பத்தில் கரையோரப் பிரதேசங்களில் மட்டுமே வழக்கிலிருந்த இந்த வைத்திய முறை பின்னர் படிப்படியாக உள் நாட்டுப் பகுதிகளிலும் பரவியது.
கி.பி. பத்தாம் நூற்றாண்டளவில் பேருவலையில் குடியேறி வாழ்ந்த துருக்கிய ஆட்சியாளரின் புதல்வர் ஜமாலுத்தீன் என்பவரும் அவரது புதல்வர்களும் யூனானி மருத்துவப் பாரம்பரியங்களைக் கடைப்பிடித்து வந்தார்கள் என்றொரு தகவல் நம் நாட்டில் வழியாகச் சொல்லப்பட்டு வருகின்றது. ஸியர் அலெக்ஸாண்டர் ஜோன்ஸ்டனின் பின்வரும் கூற்று இதனை மேலும் உறுதிப்படுத்துகின்றது.
“இந்தக் குடும்பத் தலைவர் 1806ல் மருத்துவத் திணைக்களத்தின் சுதேச அத்தியட்சகராக என்னால் நியமிக்கப்பட்டார். இங்குள்ள உள்நாட்டு வைத்தியர்களுள் மிகவும் புலமைவாய்ந்தவர்களில் ஒருவர் என குடிமக்கள் இவரைக் கருதுகின்றனர். இவர் சுதேச மருத்துவ நூல்களில் மிகச் சிறந்த ஒரு தொகுதியைத் தம்வசம் வைத்திருந்தார். அவற்றில் பெரும்பாலானவற்றை அவருடைய குடும்பத்தினர்700 – 800 ஆண்டுகளாகத் தம்மிடையே வைத்துப் பாதுகாத்து வருகின்றனர்.
அந்தக் காலப் பகுதியில் அவரது குடுபத்தினரில் குறைந்தது ஒருவராவது மருத்துவத் தொழிலை மேற்கொண்டு வருபவராக இருந்து வந்துள்ளார். இலங்கையில் முகமதிய சுதேசிய வைத்தியர்களால் மருத்துவ நோக்கங்களுக்காக மிகப் பழங்காலம் முதல் பயன்படுத்தப்பட்டுவந்த எல்லா மூலிகைகளையும் பற்றிய மிகவும் விரிவான ஒரு நூலை அவர் என்னிடம் சமர்ப்பித்தார்……” . அல்-இத்ரீஸி. யாகூத் அல்-ஹமவீ, அல்-கஸ்வீனீ முதலான புவியியலாளர்கள் இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களில் இங்கு உற்பத்தி செய்யப்பட்ட மருத்துவ மூலிகைகளும் அடங்கியிருந்தன எனக் குறிப்பிடுகின்றனர்.
இலங்கையை ஆண்ட செனரத்தும் அவரது புதல்வன் 2ம் இராஜசிங்கனும், காலியில் யூனானி மருத்துவராகக் கடமை புரிந்த சுல்தான் என்பவருக்கு இரண்டு காணித் துண்டுகளை இலவசமாக வழங்கியதுடன் கண்டியில் குடியிருப்பதற்கான அனுமதியையும் வழங்கினான். இந்த சுல்தான் கண்டிய மன்னனின் அரசவையிலும் பணி புரிந்தார். சிங்கள மன்னர்களுக்கு விசுவாசமாக நடந்துகொண்டதால் முஸ்லிம் வைத்தியர்கள் அவர்களின் நன்மதிப்பைப் பெற்று வாழ்ந்தனர். இவ்வாறான நன்மதிப்பைப் பெற்ற ஒருவருக்கு “பெஹேத்கே முகாந்திரம் (அரச மருத்துவ இலாகாவின் தலைவர்) எனும் பொறுப்பை மன்னன் வழங்கினான். அத்துடன் தும்பறை, மாத்தறை, யடிநுவர போன்ற பகுதிகளில் காணிகளை வழங்கி, “வைத்திய திலக ராஜ கருண கோபால முதலியார்” எனும் பட்டத்தையும் வழங்கி கௌரவித்தான்.
கீர்த்தி ஸ்ரீராஜசிங்கனின் காலத்தில் அவரது ஆட்சியைக் கவிழ்த்து அவரைக் கொலை செய்ய மேற்கொண்ட இரகசிய சதித்திட்டம் பற்றி இவ்வாறான கோபால முதலிமார்களுள் ஒருவர் மூலம் அறிந்துகொண்ட மன்னன், அந்த கோபால முதலியாருக்கு செப்புப் பட்டயம் ஒன்றை வழங்கி நிலபுலங்களையும் நன்கொடையாக வழங்கி கௌரவித்தான்.
முஸ்லிம்களது தேசியப் பங்களிப்பில், தேசிய அரசியலில் அவர்கள் ஆற்றிய பணிகள் சிறப்பாக நோக்கப்படவேண்டியவையாகும்.
03) மன்னர்களின் தூதுவர்களாக இலங்கை முஸ்லிம்கள்.
அப்போதைய எகிப்து நாட்டுடன் வர்த்தக ரீதியான உறவை வளர்த்துக்கொள்ள விரும்பிய மன்னன் 1ம் புவனேகபாகு, அல்ஹாஜ் அபூ உஸ்மான் என்பவரை எகிப்துக்குத் தூதுவராக அனுப்பி வைத்தார்.
ஜோன் பைபஸ் கண்டி மன்னனைச் சந்திக்க இலங்கை வந்தபோது கண்டிய மன்னனின் தூதுவராக திருகோண்மலை சென்று அவரைக் கண்டிக்கு அழைத்து வந்தவர் “உஸ்மான் லெப்பை” என்ற முஸ்லிமாவார்.
மன்னன் புவனேகபாகு போர்த்துக்கேயரோடு சேர்ந்து மன்னன் மாயாதுன்னையை எதிர்த்தபோது போர்த்துக்கேயரை விரட்டியடிப்பதற்காக கள்ளிக்கோட்டை மன்னன் சாமோரினின் உதவி மாயாதுன்னைக்கு அவசியமான வேளையில், இவ்வுதவியைப் பெறுவதற்காக முஸ்லிம்களையே கள்ளிக்கோட்டைக்கு மாயாதுன்னை அனுப்பிவைத்தான். சிங்கள மன்னர்களிடத்தில் நான்கு முஸ்லிம் அமைச்சர்கள் பணியாற்றினரென புவியியல் அறிஞர் அல்-இத்ரீஸி குறிப்பிடுகின்றார். இவர்கள் நால்வரும் அமைச்சர்களாகவன்றி அந்நிய சமூகத்தாரிடையே ஏற்படும் பிணக்குகளைத் தீர்த்து வைப்போராகவும் வெளிநாட்டு வணிகத்தில் அரசுக்கு ஆலோசனை வழங்குவோராகவுமே இருந்தனர்.
கண்டிய மன்னன் சார்பாக முஸ்லிம்கள் ஒல்லாந்தரின் உதவியை நாடினர் என்ற ஒரே காரணத்துக்காகவே போர்த்துக்கேயர் கி.பி. 1642ல் 200 முதல் 300 வரையான ஆண்களை மாத்தறையில் கொலைசெய்ததோடு பெண்களையும் சிறார்களையும் சிறைப்படுத்தினர்.
போர்த்துக்கேயரைத் துரத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்கு நன்றிக் கடனாகவே மன்னன் ராஜசிங்கன் அக்குறணையில் முஸ்லிம்களுக்கு காணி வழங்கி அவர்களை அங்கு குடியிருக்கச்செய்தான்.
1815ல் இங்கிலாந்தின் தாராண்மைக் கொள்கை நம் நாட்டிலும் தாக்கம் செலுத்தியதன் விளைவாக 1833ல் அறிமுகப்படுத்தப்பட்ட சட்டநிரூபண சபையில் முஸ்லிம்களும் பங்குகொள்ள வாய்ப்புக் கிடைத்தது. இதனால்1865ல் முனிசிபல் சப மற்றும் உள்ளூராட்சி மன்றங்களிலும் முஸ்லிம்களுக்குப் பங்குகொள்ள வாய்ப்புக் கிடைத்தது. கண்டி முனிசிபல் சபையில் 8 முஸ்லிம் உறுப்பினர்கள் முஸ்லிம் சமூக நலனுக்காகக் குரல் கொடுத்தனர்.
1833ல் சட்டநிரூபண சபை அறிமுகமானபோதும் 1889 வரை அதில் முஸ்லிம்களுக்குப் பிரதிநிதித்துவம் எதுவும் வழங்கப்படவில்லை. பறங்கியரும் தோட்டத் துரைமாரும் முஸ்லிம்களைவிட எண்ணிக்கையில் குறைந்த சிறுபான்மையினராக இருந்தும் அவர்களுக்குச் சட்டநிரூபண சபையில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சித்தி லெப்பையும் அவரது நண்பர்களும் அரசியல் உரிமைகோரி பத்திரிகைகள் வாயிலாகக் குரல் கொடுத்தனர். இதன் விளைவாக 1899ல் எம். ஸீ. அப்துல்ரஹ்மான் சட்டநிரூபண சபை உறுப்பினாராகத் தெரிவு செய்யப்பட்டார்.
இலங்கையின் சுதந்திரப் போராட்டங்களிலும் சகோதர இனத்தினரோடு இணைந்து முஸ்லிம்கள் குரல் கொடுத்தனர். ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரத்தை வென்றெடுப்பதற்காக 1919ல் உருவாக்கப்பட்ட தேசிய காங்கிரஸில் அதன் உப தலைவர்களுள் ஒருவராக கலாநிதி டீ. பீ. ஜாயா தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் முஸ்லிம்களில் பலரும் இதில் இணந்து செயலாற்றினர். அரசாங்க சபையில் கலாநிதி ஜாயா ஆற்றிய உரையில் கூறிய, “இன ரீதியான கோரிக்கைகளையும் இலாபங்களையும் அடைவதைவிட நாட்டுக்கான சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்ள முயற்சிப்பது ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை மிகவும் முக்கியமானதாகும்” என்ற வரிகள் ஜாயாவுக்கிருந்த தேசிய உணர்வுக்கும் தேசியப் பற்றுக்கும் சிறந்த எடுத்துக்காட்டுக்களாகும்.
1939ல் நடைபெற்ற அகில இலங்கை அரசியல் மாநாட்டில் அப்போதைய சட்ட சபை உறுப்பினர் மாக்கான் மாக்கார்,
“ இந்த நாட்டின் பெரும்பான்மைச் சமூகம் சிறுபான்மை இனமாக மாறுவதை அனுமதிக்க முடியாது” என ஓங்கி ஒலித்த வார்த்தைகள் இன்றைய சூழலில் பெரும்பான்மைச் சகோதரர்கள் மத்தியில் முன்வைக்கப்படவேண்டிய வைர வார்த்தைகளாகும்.
இதே மா நாட்டில் கலாநிதி பதீஉத்தீன் மஹ்மூத் தனது உரையில், “எமது நாட்டுக்குப் பூரண சுதந்திரம் கோருவதில் சிங்கள அரசோடு நானும் இணைந்துகொள்கிறேன்” என்பதையும் உள்ளடக்கி உரையாற்றினார்.
“எம்மிடமுள்ள அரசியல் ஞானமும் நீதி நிலை நாட்டப்படவேண்டுமென்ற உணர்வும்தாம் இந்த நாட்டுக்கு டொமினியன் அந்தஸ்துக் கோரும்போது சிங்கள மக்களோடு தோளோடு தோள் நின்று நாமும் போராட எம்மைத் தூண்டின” என்று ஸேர் ராஸிக் பரீத் 1945ல் யாப்புச் சீர்திருத்தம் தொடர்பாக அரசாங்க சபையில் உரை நிகழ்த்தும்போது குறிப்பிட்டார்.
முஸ்லிம்கள் சிங்கள மன்னர்களின் காலத்தில் அவர்களது இராணுவத்திலும்பங்காற்றி உழைத்துள்ளனர். மட்டுமன்றி போர்த்துக்கேயப் படைகளுக்கு எதிராக மன்னனின் இராணுவத்தினரோடு இணைந்து போராடியதை வரலாற்றுப் பதிவுகளில் இருந்து கண்டுகொள்ள முடிகின்றது.
இரண்டாம் இராஜசிங்கனின் காலத்தில் நடைபெற்ற “வெள்ளவாய” எனப் பெயர் பெற்ற யுத்தத்தில் முஸ்லிம்களின் ஒட்டகப் படை முக்கிய இடம் வகித்தது. இந்த வெற்றியைக் கண்ணியப்படுத்தும் வகையில் ஹங்குரங்கெட்ட தேவாலயத்துக்கு அன்பளிப்புச் செய்த புடவையில் இந்த ஒட்டகப்படை ஓவியமாக வரையப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .
இறுதியாக இலங்கையின் பாதுகாப்புப் பிரிவில் முதலாவதாக உயிர் தியாகம் செய்தது " துவான் " என்ற ஒரு ஜாவா முஸ்லிம் . சுடப்பட்ட அந்த நிகழ்வைத்தான் இன்று பொலீஸ்னமாக கொண்டாடுகின்றார்கள் . இப்படி இலங்கை முஸ்லிம்களின் சேசியப் பங்களிப்பு எண்ணிப் பார்க்க முடியாத அளவு உள்ளது .
கட்டுரை
அஷ்ஷெய்க் ஹபீஸூல் ஹக் ( பாதிஹி) பணிப்பாளர் USA கல்வி நிறுவனம். வரிப்ப்பத்தான்சேனை.