உயகுர் முஸ்லிம்கள் மீது சீனா அரசு நடத்தும் காட்டுமிராண்டித்தனம்.
__________________________________________
அஷ்ஷெய்க் ஹபீஸுல் ஹக் ( பாதிஹி )
அறிமுகம்.
சீனா கிழக்காசியாவில் அமைந்துள்ள மிகப்பெரும் ஒரு வல்லரசு நாடாகும் . இதன் கிழக்கில் வட கொரியாவும் வடக்கில் மங்கோலியாவும் உள்ளன. வடகிழக்கில் ரஷ்யா , வடமேற்கில் கசக்ஸ்தான், கிர்கிஸ்தான் ,
தாஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. மேற்கிலும் தென் மேற்கிலும் ஆப்கானிஸ்தான் ,பாகிஸ்தான், இந்தியா , நேபாளம் ,பூட்டான் ஆகிய நாடுகளும் தெற்கில் மியன்மர், லாவோஸ் ,
வியட்நாம் ஆகிய நாடுகளும் உள்ளன. கடலுக்கப்பால் கிழக்கிலும் தென்கிழக்கிலும் தென் கொரியா,
ஜப்பான் , பிலிப்பைன்ஸ் , புருனை ,
மலேசியா , இந்தோனேசியா ஆகிய நாடுகள் உள்ளன.
இது ஊலகில் சனத்தொகை கூடிய நாடுகளில் முதலிடம் வகிக்கிறது. கடந்த 2015 ம் ஆண்டில் நடத்தப்பட்ட கணிப்பீட்டின்படி 1,376,049,000 மக்கள் தொகையைக் கொண்டுள்ளனர் .இதன் தலைநகராக பீஜிங் காணப்படுகின்றது. மேலும் பெரிய நகராக சாங்காய் காணப்படுகின்றது. உலகிலேயே அதிக எண்ணிக்கையில் மக்கள் வாழும் இங்கு 56 வகை இன மக்கள் உள்ளனர், இவர்களுள் 93% ஹன் இனத்தவர் . பௌத்தம் , டாவோயிசம் ,
இஸ்லாம் , கத்தோலிக்க திருச்சபை ,
சீர்திருத்தத் திருச்சபை ஆகிய மத நம்பிக்கைகளைப் பின்பற்றுவோராவார்.
இந்நாடு மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் பல குடும்ப நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தியது.
இவற்றில் '' ஒரு தம்பதியினருக்கு ஒரு குழந்தை திட்டம் ,, மிகவும் பிரசித்தி பெற்றது. இத்திட்டம் மக்கள் தொகை வளர்ச்சியை நன்கு கட்டுப்படுத்தினாலும், 117 ஆண்களுக்கு 100 பெண்கள் என்ற பால் விகித நிலை அங்கு ஏற்பட்டுள்ளது.
சீன மொழி இந்நாட்டில் பேசப்படும் மொழியும் அதிகாரப்பூர்வ மொழியும் ஆகும். இம்மொழியை அடிப்படையாகக் கொண்ட பல வட்டார மொழிகள் சீனாவில் பேசப்படுகிறது. இதில் ஒன்றான மாண்டரின் சீன மொழி, உலகில் அதிக மக்கள் பேசும் மொழி என்ற சிறப்பைக் கொண்டுள்ளது. மேலும் இங்கு பிராந்திய மொழிகளாக மொங்கோ, திபெத்திய, உய்குர் போன்ற மொழிகள் காணப்படுகின்றது. தற்போது இதன் அதிபராக சீ சின்பிங் இருக்கின்றார்.
உயகுர் முஸ்லிம்கள்மீது சீனா அரசு நடத்தும் காட்டுமிராண்டித்தனம்.
சீனாவைப் பொறுத்தவரை அது ஒரு கம்யூனிச நாடு. இருந்தும் சுமாராக இரண்டு கோடி முஸ்லிம்கள் அங்கு வாழ்கின்றார்கள். இக்கம்யூனிச நாட்டில் புத்த மதம், டாவோயிஸம், கத்தோலிக்கம், புரோட்டஸ்டன்ட், இஸ்லாம் ஆகிய 5 மதங்களே அங்கீகரிக்கப்பட்ட மதப் பிரிவுகள்.
இதில் சீனாவின் மேற்குப்பகுதியான ஜின் ஜியாங் மாகாணத்தில் வாழும் உய்குர் பிரிவைச் சேர்ந்த முஸ்லிம்களை பிரிவினைவாதிகளாகவும் தீவிர மதப்பற்று கொண்டவர்களாகவும் சீனா கருதுகிறது. இவர்கள் தாடி வளர்ப்பது, இஸ்லாமிய உடைகள் அணிவது, மதராஸாக்களில் பாடம் படிப்பது குற்றம் என்றும் அவர்கள் 5 ஆண்டுகளுக்கு முன்னர் சீனா பாரம்பரிய கலாச்சாரத்திற்கு மாறவேண்டும் என புதிய சட்டம் ஒன்றை சீனா அரசு வெளியிட்டுள்ளதாக குளோபல் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இது போதாமைக்கு சீனா அரசு ஜின்ஜியாங் பகுதியில் முஸ்லிம்களுக்கு பாதுகாப்புடன் கூடிய ஒரு முகாமை சீனா நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ள்ளது. கடந்த 2018 ஏப்ரல் 22 ஆம் திகதி சீனா செயற்கைக்கோள் எடுத்த புகைப்படத்தின்படி ஜின் ஜியாங் மாகாணத்தில் பாலைவனப் பகுதியில் அதிக பாதுகாப்பான ஒரு வளாகம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 2 கிலோ மீட்டர் நீளத்துக்கு வெளிப்புற சுவர் கட்டப்பட்டு, 16 காவலர் கோபுரங்கள் அமைக்கப் பட்டுள்ள புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதுவரைக்கும் 10 இலட்சத்திற்கும் அதிகமான உய்குர் முஸ்லிம்கள் சீனா அரச முகாம்களில் அடைக்கப்பட்டு சித்தரவதை செய்யப்பட்டு வருவதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது சீனாவில் உண்ணா நோன்பு இருப்பது, தொழுகையில் ஈடுபடுவது, ஹிஜாப் அணிவது, தாடி வளர்ப்பது போன்றவை சீனாவில் தண்டனைக்குரிய குற்றம் எனவும் ஜின் பிங்கின் இரண்டாவது முறையாகச் சீனா அதிபராகப் பதவியேற்ற பிறகு சீனமயமாக்கல் திட்டத்தை அமல்படுத்தத் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும்
சீனா உய்குர் இன மக்களை உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை, அரசியல், சித்தாந்தம், மதம் சார்ந்த அனைத்து விஷயங்களிலும் சீன நாட்டுப் பண்பாட்டைப் பின்பற்றும் வகையில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
தற்போது சீனாவைச் சேர்ந்த 8 இஸ்லாமிய சங்கப் பிரதிநிதிகளுடன் சீன அரசு அதிகாரிகள் இதற்காகப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் ஜின் ஜியாங் மாகாணத்தில் வாழும் உய்குர் இன இஸ்லாம் மக்களைப் படிப்படியாக சீன கலாசாரத்துக்கு மாறிக்கொள்ள பயிற்சி அளிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் புதிய செய்திகள். வெளிவந்துள்ளது.